சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலில் நடவடிக்கை
சீனக் கடற்படையின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் லட்சத்தீவுகளிலும் கடற்படை வலிமையை இந்தியா திட்டமிட்டு அதிகரித்து வருகிறது.
மலாக்கா நீரிணை முதல் ஆப்பிரிக்காவின் கிழக்கு முனை வரை பல்வேறு நாடுகளில் துறைமுகத் திட்டங்களில் முதலீடு செய்துள்ள சீனா, அந்தத் துறைமுகங்களில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது.
இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவற்றுக்கும் எதிரான அச்சுறுத்தல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளிலும் அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவுகளிலும் கடற்படை விமானத் தளங்களை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் அந்தப் பகுதிகளில் கப்பல் போக்குவரத்தும் விமானப் போக்குவரத்தும் எந்த அச்சுறுத்தலும் இன்றிச் சுதந்திரமாக நடைபெறுவது உறுதி செய்யப்படும்.
இந்தியா தனக்குச் சொந்தமான தீவுகளின் அருகில் போர்க்கப்பல்களையும் விமானந்தாங்கிக் கப்பல்களையும் நிறுத்தியுள்ளதால், கடற்பரப்பில் அடிக்கடி உலாவந்த சீனப் போர்க்கப்பல்கள் பாதுகாப்பாகத் துறைமுகங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.