2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று - மஹேலவின் இடத்தை பிடிப்பாரா கோஹ்லி?

2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று - மஹேலவின் இடத்தை பிடிப்பாரா கோஹ்லி?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, பகலிரவு ஆட்டமாக இன்று இடம்பெறவுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின், முதலாவது போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, 1 - 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

உபாதைக்கு உள்ளாகியுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க இன்றைய போட்டியில் பங்கேற்காவிட்டால், அவருக்குப் பதிலாக லஹிரு குமார உள்ளீர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இந்திய அணியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடன் காடன் மைதானத்தில், இறுதியாக, 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இடம்பெற்றது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில், இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 252 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர், 253 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, 202 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர், இந்திய அணி தமது சொந்த மண்ணில், 24 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடி, 3 தொடர்களில் மாத்திரமே தோல்வியடைந்தது.

இதேவேளை, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களின் பட்டியலில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் இடத்தைக் கைப்பற்றுவதற்கு இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி, இன்னும் 67 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளார்.

448 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்ற மஹேல ஜயவர்தன, 12,650 ஓட்டங்களைப் பெற்று, குறித்த பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில், 266 போட்டிகளில் பங்கேற்றுள்ள விராட் கோலி, 12, 584 ஓட்டங்களுடன், 6 ஆம் இடத்தில் உள்ளார்.