திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை!

திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை!

தூத்துக்குடி அருகே சில மணி நேரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டில் இருந்து மாயமான மணமகன் தலையில் வெட்டுக்காயத்துடன் சாலையோரம் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்டதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஜெகதீஷ். உப்பள தொழிலாளியான ஜெகதீஷுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.

காலையில் திருமண சடங்குகள் செய்வதற்காக வீட்டில் இருந்த மாப்பிள்ளை ஜெகதீஷை தேடிய போது அவரை காணவில்லை. இதையடுத்து செய்வதறியாது திகைத்து போன மாப்பிள்ளை வீட்டார் அக்கம்பக்கத்தில் தேடினர். நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் இருந்து ஜெகதீஷின் தந்தையை தொடர்பு கொண்ட காவலர் ஒருவர், உங்கள் மகன்ஓடை பாலம் சந்திப்பில் சாலை விபத்தில் பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பதறிபோய் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் சென்று பார்த்த போது , மணவறையில் புது மாப்பிள்ளையாக அமர வேண்டிய மகன், தலையில் வெட்டுக்காயத்துடன் பிணவறையில் சடலமாக கிடத்தப்பட்டிருப்பதை கண்டு கலங்கி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

விபத்தில் சிக்கியதாக சொல்லப்பட்ட நிலையில் ஜெகதீஷின் முன்பக்க தலையில் மட்டும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது கைகால்களில் சிராய்ப்பு காயங்களோ, வேறு பலமான காயங்களோ இல்லை என்றும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்பதால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலனிடம் , அவர் வீட்டில் இருந்து இந்த இடத்திற்கு எப்படி வந்தார் ? எதற்காக வந்தார்? யார் அழைப்பின் பேரில் வந்தார் ? தனியாக வந்தாரா அல்லது உடன் வேறு நபர்கள் வந்தார்களா ? என்பதை கண்டறிய செல்போன் தொடர்புகளை வைத்து ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

விபத்து வழக்கில் அதுவெல்லாம் முடியாது என்பது போல அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த ஜெகதீஷின் உறவினர்கள், அங்கிருந்த பொலிசாரிடம் இது கொலை, தங்கள் மகன் கொலை செய்யப்பட்டிருக்கிறான், நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்து என்றும் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையின் முன் வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால் விபத்து பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது ஊரில் இருந்து விபத்து இடத்தில் வரை பொறுத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்ய தெரிவித்துள்ளதாகவும், அவர் என்ன காரணமாக வீட்டில் இருந்து இந்த பகுதிக்கு வந்தார்? என்பது குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.