உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டம்: இஸ்ரேலிடம் இலங்கை முக்கிய கோரிக்கை

உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டம்: இஸ்ரேலிடம் இலங்கை முக்கிய கோரிக்கை

உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேல் அரசாங்கத்தை கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது அமர்வில் உரையாற்றியபோதே குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

பாலஸ்தீன மக்களின் நிலைமை குறித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் லிங்க் ஐக்கிய நாடுகள் அமர்வில் அறிக்கையொன்றினை முன்வைத்தார்.

குறித்த அறிக்கை தொடர்பாக ஆராய்ந்த இலங்கை, தனது நிலைப்பாட்டை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன்,குறித்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொது செயலாளர், மனித உரிமைகள் குழுவின் உயர்ஸ்தானிகர் மற்றும் இஸ்ரேலின் குறித்த திட்டம் தொடர்பாக விசாரிப்பதற்கான சிறப்பு குழுவினரால் எழுப்பப்பட்ட கவலைகள் இலங்கை அரசாங்கத்தினால் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை, இஸ்ரேல் அரசாங்கத்தின் இணைப்புத்திட்டம், ஐக்கிய நாடுகளின் விதிமுறைகளை மீறும் செயல் எனவும் விமர்சனம் வெளியிட்டுள்ளது.

குறித்த உத்தேச இணைப்புத்திட்டத்தால், மேற்கு கரை மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழும் மனித உரிமைகளை பாதிக்கும் எனவும் குறித்த இனக்குழுவின் இடப்பெயர்வுக்கு வழி செய்யும் எனவும் சிறப்பு அறிக்கையாளர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கருத்துக்களை இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடர, இஸ்ரேல் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை, குறித்த உத்தேச இணைப்பை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.