உந்துருளியில் சென்று தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது

உந்துருளியில் சென்று தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது

கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட மினுவாங்கொடை வீதி பாலத்துக்கு அருகில் நேற்று (28) பின்பக்க இலக்கத்தகடு இல்லாத சந்தேகத்துக்குரிய உந்துருளியொன்றில் அமர்ந்திருந்த இருவர் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், கம்பஹா மற்றும் யக்கல ஆகிய காவல்துறை பிரிவுகளில் தங்க நகைக்கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த உந்துருளியில் சென்று கொள்ளையிட்ட தங்க நகைகளை உருக்கித் தலா 18 கிராம் 160 மில்லிகிராம் எடையுடைய 3 கட்டிகளாக்கி சந்தேகநபர்கள் வைத்திருந்ததாகவும், அவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதுன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுகளையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று (29) கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கம்பஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.