அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார் ஜொகோவிச்

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார் ஜொகோவிச்

முதல் நிலை டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச் அஸ்திரேலியாவை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற உத்தரவை மதித்து அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறத் தயார் என அவர் இன்று (16) காலை தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அவர் மெல்பேர்னில் இருந்து துபாய் நோக்கி பயணிக்கும் விமானத்தில் செல்ல திட்டமிட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமது விசா அனுமதியை ரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி நொவெக் ஜொகோவிச் தாக்கல் செய்த மேன்முறையீடு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை (17) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் தகைமையினை அவர் இழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிற்கான தடுப்பூசியினை பெறாத நிலையில் மெல்பர்னில் உள்ள தடுப்பு நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் நாடுகடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக அவுஸ்திரேலியாவினால் நாடு கடத்தப்படுபவர்கள் குறைந்தது மூன்று வருடங்களுக்கு அந்த நாட்டிற்குள் மீள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அதேவேளை, திட்டமிடப்பட்டிருந்த போட்டியில் அவர் பங்குகொண்டு, வெற்றியினை பெற்றால் சர்வதேச ரீதியாக பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் அதிக வெற்றி பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.