உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காது விட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வெளிப்பட்ட இத்தொற்று குறுகிய காலத்திலேயே உலக நாடுகளை திணற வைத்துள்ளதுடன் இதன் வீரியத்தை கணிக்க முடியாமல் உலகளவில் விஞ்ஞானிகள் தமது கைகளை பிசைந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தீவிரமாக இத்தொற்று பரவிவரும் நிலையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

உலக நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பற்றி பல்வேறு தகவல்கள் கூறி வருவது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது.

பல நாடுகள் தவறான திசையில் செல்கின்றன. தொற்றை கட்டுப்படுத்த யாரும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

சுகாதார நடைமுறைகளை மக்களுக்கு தெளிவாக கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். பொதுமக்களை தனிமனித இடைவெளியை பின்பற்ற செய்ய வேண்டும். முக கவசம் அணிய வைக்க வேண்டும். கைச்சுத்தம் பராமரிக்க செய்ய வேண்டும். அறிகுறிகள் இருந்தால் வீட்டில் தங்க வைக்க வேண்டும். இவை அனைத்தையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

முறையான கட்டுப்பாடுகளை விதித்து பொருளாதார, சமூக, கலாசார விளைவுகளை கருத்தில் கொண்டு அரசாங்கங்கள் திறம்பட பதில் நடவடிக்கைகளை எடுப்பது கடினமானது தான். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் நமது முதல் எதிரியாகவே தொடர்கிறது.

எனினும் பல அரசுகளின் செயற்பாடுகளும் அந்நாட்டு மக்களின் செயற்பாடுகளும் இதை பிரதிபலிப்பதாக இல்லை.

அடிப்படை கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தாது உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனா வைரஸ் தொற்றின் நிலை இன்னும் மோசமாகி விடும். இதனால் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் போய்விடுமென அவர் எச்சரித்துள்ளார்.