மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

புத்தளத்தில் தெதுரு ஓயா உள்ளிட்ட மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (28) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

ஆறு வான் கதவுகள் நான்கு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும், தப்போவ நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் ஐந்து ஐந்து அங்குலம் வரையும் , இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எனவே, குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா, இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கிரம உத்தியோகத்தர்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக புத்தளம் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சிலாபம் மற்றும் ஆலங்குடா ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதாகவும், அவ்வாறு தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்தார்.