கிளிநொச்சியில் வீதியை கடக்க முற்பட்ட 17 வயது பாடசாலை மாணவி விபத்தில் பலி! (படங்கள்)
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகில், இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்திபெற்ற மாணவிகள் மூவர், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெற சென்றுள்ளனர்.
அவ்வேளையில் குறித்த மாணவிகள் வீதியை கடக்க முற்பட்டதால், மேற்படி டிப்பர், பாதசாரி கடவையை அண்மித்து நிறுத்தப்பட்டிருந்ததுடன், அதற்குப் பின்னால் வந்த மற்றுமொரு டிப்பரும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அவ்வாகனத்தின் பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து ஒன்று, குறித்த டிப்பரை மோதியதையடுத்து, அது முன்னால் நின்றிருந்த பட்டா ரக டிப்பரை மோதியுள்ளது.
இதனையடுத்து, குறித்த இரு டிப்பர்களும், வீதியைக் கடக்க முற்பட்ட மாணவிகள் மீது மோதியதில் 17 வயதான மாணவியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


