காவல்துறையினரின் பணிக்கு இடையூறு செய்த பெண்கள் உட்பட 9 பேர் கைது!

காவல்துறையினரின் பணிக்கு இடையூறு செய்த பெண்கள் உட்பட 9 பேர் கைது!

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய - துருக்குராகம பிரதேசத்தில் நேற்று (06) பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் பிரதேச போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய,  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 கிராம் ஹெரோயினுடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரை மீட்க வந்த குழுவொன்றினால் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகள் இருவரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இன்று (07) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கஹட்டகஸ்திகிலிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.