வல்வெட்டித்துறையில் போதைப்பொருள் - ஆயுதங்களுடன் 13 பேர் கைது!

வல்வெட்டித்துறையில் போதைப்பொருள் - ஆயுதங்களுடன் 13 பேர் கைது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்த 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் பிறந்தநாள் நிகழ்வொன்று நடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து 5 வாள்கள், 2 உந்துருளிகள், 2 சைக்கிள் செயின்கள், ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 20 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்டக் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு ஒன்றின் உறுப்பினர்களா? அல்லது வேறு ஏதேனும் குழுவைச் சேர்ந்தவர்களா? எனக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.