சில பகுதிகளுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
கொரோனா அச்சம் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுகாதாரத் தரப்பினரால் அறிவுறுத்தல் வழங்கப்படும் வரை, குறித்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு எதிர்வரும் நாட்களில் வாக்காளர் அட்டைகள் அனுப்பிவைக்கப்படும் என தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஏனைய பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகளை அனுப்பிவைப்பதற்காக, சுமார் இரண்டாயிரம் தபால் நிலையங்களின் ஊடாக எட்டாயிரம் சேவையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள், கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் ஊடாக தபால் அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.