பாகிஸ்தான் வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் கடும் மோதல் -15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் கடும் மோதல் -15 பேர் உயிரிழப்பு

மோதலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வதந்திகள் பரவுவதை தடுக்க செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் குர்ரம் மாவட்டத்தில் கைடு மற்றும் பிவர் ஆகிய இரண்டு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரு தரப்பினரும் குர்ரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட பகுதியை தங்களுக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், அம்மாவட்டத்தில் தெரீ மேகல் கிராமத்தைச் சேர்ந்த பிவர் இன பழங்குடியின மக்கள், பிரச்சினைக்குரிய பகுதியில் கடந்த சனிக்கிழமை விறகு சேகரிக்க சென்றிருந்தனர். அப்போது, அங்கு வந்த கைடு இன பழங்குடி மக்களில் சிலர் இது தங்களுக்கு சொந்தமான பகுதி என்று கூறி, விறகு எடுக்கக்கூடாது என பிவர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பிவர் இன மக்கள் மீது கைடு பழங்குடியினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சிலர் உயிரிழந்தனர்.

 

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு தரப்பினர் இடையேயும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் எதிர்தரப்பு கிராமத்திற்குள் புகுந்து மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 

 

மோதலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வதந்திகள் பரவுவதை தடுக்க செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

 

இரு தரப்பினர் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிரச்சினைக்குரிய வனப்பகுதியில் இரு தரப்பினரும் விறகு சேகரிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.