23 ஆவது அகவை பூர்த்தியை கொண்டாடும் சக்தி TV
Colombo (News 1st) மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்து, தமிழ் பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி தொலைக்காட்சி தனது 23 ஆவது அகவை பூர்த்தியை இன்று (20) கொண்டாடுகின்றது.
மரபுகளைத் தகர்த்த பாரதியின் புதுக்கவியாய் வீறு நடைபோடும் சக்தி தொலைக்காட்சி, தொலைக்காட்சி வரலாற்றில் படைத்த சாதனைகளோ ஏராளம்…
சாதனைப் பயணத்தில் 23 அகவையை பூர்த்தி செய்யும் சக்தி தொலைக்காட்சி, 1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் தொலைகாட்சிகளின் முன்னோடியாய் புதுமைகளின் தாயகமாய் சக்தி TV திகழ்கின்றது.
பல்சுவை நிகழ்ச்சிகளால் நேயர்கள் மனதில் சக்தி தொலைக்காட்சி நீங்காத இடம்பிடித்துள்ளது.
நாட்டின் இலத்திரனியல் ஊடகத்துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் சக்தி தொலைக்காட்சி, முதல்நிலை மற்றும் முன்னணி இலத்திரனியல் ஊடகமாகத் திகழ்கின்றது.
கலை, கலாசாரம், பண்பாடு, அரசியல் என அனைத்து துறைகளிலும் மக்களுக்கு தரமான நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமை சக்தி தொலைக்காட்சிக்கு உண்டு.
தனது 23 ஆண்டு கால சாதனைப் பயணத்தில் இலங்கை கலைஞர்களின் இலைமறை காய் திறமைகளுக்கு களமமைத்துக் கொடுக்கவும் சக்தி தொலைக்காட்சி எப்போது தவறவில்லை.
ரசிகர்களின் இதயங்களை வென்ற சக்தி TV, தடைக்கற்களை தகர்த்து வெற்றிநடை போட நியூஸ்பெஸ்ட்டின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்…