
கந்தகாரில் உள்ள மசூதி அருகே பயங்கர குண்டு வெடிப்பு: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மசூதி அருகே பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மசூதி அருகே இன்று பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை என்பதால் மசூதியில் தொழுகை நடத்துவதற்கு ஏராளமானோர் கூடினர். இதை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதுவரை எந்த அமைப்பும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
கடந்த 8-ந்தேதி வடக்கு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கர குண்டு வெடிப்பில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.