
மாநகர சபையை குழப்பி அபிவிருத்திகளை தடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் மட்டக்களப்பு மாநகர சபையினை குழப்புவதும் அதன் மூலமாக அபிவிருத்திகளை தடுப்பதற்குமான நோக்குடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன் தெரிவித்தார்.
நேற்று (10) மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாநகர சபையில் 150 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் உள்ளனர். இவர்களது நியமனங்களை புதுப்பிக்கும் போது எந்த நியமனமும் எதிர்வரும் காலங்களில் மேற்பார்வையாளரின் உறுதிப்படுத்தலும் முதல்வரின் அனுமதி கிடைத்த பின்னர் தான் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று ஜுன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 03 உத்தியோகத்தர்களுக்கு சேவை நீடிப்பு கோரிக்கை வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நீடிக்கப்படாலம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தெளிவான தீர்மானத்தினை விளங்கிக் கொள்ளாமல் மாநகர சபை ஆணையாளர் அவருக்கு நியமனம் வழங்கியுள்ளார்.இது மாநகர சபையின் சட்டத்தினை மீறிய செயற்பாடாகும். மாநகர சபை கட்டளை சட்டத்தின் பிரகாரம் மாநகர சபை தீர்மானங்களுக்கு எதிராக எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. நியமனங்களை பிழையான வகையில் வழங்கினால் சபை அதனை பொறுப்பேற்காது, நானும் பொறுப்பேற்க முடியாது.
அவ்வாறு பிழையான நியமனங்களை வழங்கும்போது அவர்களுக்கு சம்பளம் வழங்கும் போது எங்கள் அனுமதிக்கு அவை வரும்போது தான் எங்களால் சிபாரிசு செய்யப்படாத ஒருவருக்கு சட்டவிரோதமாக நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனம் பற்றியும் அதனால் ஏற்பட்ட பிரச்சினை பற்றியும் மாகாண சபையின் கீழிருக்கின்ற அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவித்திருக்கின்றோம், உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்திருக்கின்றோம். இது சம்பந்தமாக அவருக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்கு பிரதம செயலாளருக்கு அறிவித்திருக்கின்றோம், ஆளுநருக்கு அறிவித்திருக்கின்றோம். இவர்கள் இருவருமே எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் உள்ளுராட்சி ஆணையாளர் தெளிவான விளக்கம் கோரியிருக்கின்றார். மாநகர சபைத் தீர்மானத்தை மீறி உங்களால் எவ்வாறு நியமனம் வழங்க முடியும் என்றும் உடனடியாக இது சம்பந்தமான விளக்கத்தை வழங்குமாறும் அவர் கேட்டிருக்கின்றார். அத்துடன் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டிருக்கின்றார். அதற்கு பதிலளிக்கும் முகமாக ஆணையாளர் எனக்கு பிரதியிட்டு உள்ளுராட்சி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன் என்று அதில் குறிப்பிட்டிருக்கின்றார். 5 நாட்கள் கடந்துவிட்டன். ஆனால் அவர் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதற்கு மேலதிகமாக மாநகரசபையில் இருந்த திறப்புகள் அனைத்தும் களவாடப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக நான் வேலைப் பகுதிக்கு பொறுப்பாக இருக்கின்ற பொறியியலாளருக்கு நான் கடிதம் அனுப்பியிருக்கின்றேன். இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கும் உரியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு நான் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றேன்.
ஆனால் இன்று வரை பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை. வேண்டுமென்று மாநகர சபைச் செயற்பாட்டை குழப்புவதற்கும் பொதுமக்களுக்கு பிழையான தகவல்களை வழங்குவதற்குமாகவே இங்கு நிர்வாகத்தில் இருக்கின்ற ஆணையாளர் இருக்கின்றார். எடுக்கப்பட்ட தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஆணையாளருக்கு விளக்கம் கோரி வந்த கடிதங்கள் அனைத்தும் இருக்கின்றன. ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன் என்ற ஆணையாளரின் கடிதமும் இருக்கின்றது.
அலுவலக ரீதியாக இவை அனைத்தையும் செய்துவிட்டு களத்தில் வேறு முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அலுவலக உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையாளர் முயற்சிப்பார் என நினைக்கின்றேன். பிழையாக வழங்கப்பட்ட நியமனம் மீளப் பெறப்பட வேண்டும். அதன்பின்பு வரவிருக்கின்ற எங்களுடைய சபைக் கூட்டத்தில் அவர் கடமை புரிந்த காலத்திற்கான கொடுப்பனவை எவ்வாறு வழங்குவது என்பதை தீர்மானிக்கலாம்.
குறிப்பிட்ட நபர் தவிர்ந்த அனைவரும் வேலைக்கு அனுபபப்பட வேண்டும் எனவும் வேலைகளில் எந்தவித தாமதமும் இருக்கக்கூடாது எனவும் உள்ளுராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றார். ஆனால் இவை அனைத்தும் உதாசீனம் செய்யப்பட்டு பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் நான் இன்று எமது அபிவிருத்திக்குழு இணைத் தலைவருடனும் கலந்துரையாடினேன். அவருக்கும் இது தொடர்பில் தெளிவின்மை இருந்த காரணத்தினால் நான் இது தொடர்பான ஆவணங்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரும் இது தொடர்பில் ஆணையாளருடன் கதைப்பார் என நம்புகின்றேன்.
மாநகரசபையின் செயற்பாடுகள் சுமுகமாக நடைபெறுவதற்கு ஆணையாளர் தன்னால் விடப்பட்ட பிழைகளை திருத்திக்கொள்ள வேண்டும். அவர் திருத்தும் பட்சத்தில் மாநகர சபையானது ஒழுங்காக இயங்கும். குறித்த நியமனம் வழங்கப்பட்ட நபருக்கு எதிராக ஏற்கனவே சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஜி.கே பவுண்டேசனால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அமரர் ஊர்தியானது இங்கே தரித்து வைக்கப்பட்டிருந்தது. ஆணையாளர் அவர்கள் இந்த விடயத்தில் தீவிரமாக தலையிட்டு அந்த வாகனத்தை சேதப்படுத்தி எங்கள் தீர்மானங்களை மீறி அதனை அப்புறப்படுத்தியபோது குறித்த நபரே சாரதியாக செயற்பட்டிருந்தார். இது தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. இந்த வழக்கு தீர்ப்பு வழங்கப்படும்வரை இவருக்குரிய நியமன நீடிப்பை எங்களால் வழங்க முடியாது.
மாநகர சபை முதல்வரின் அனுமதியின் பின்பு தான் நியமனக் கடிதங்கள் வழங்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த தீர்மானத்தை மீறி இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. மாநகரசபை கட்டளைச் சட்டத்தை மீறிய இந்த செயலை எங்களால் அனுமதிக்க முடியாது.
இதற்கு உடனடியாக மாநகர சபை நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளுராட்சி ஆணையாளர், பிரதம செயலாளர் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களுக்குப் பொறுப்பாக பொறியியலாளர் இருக்கின்ற போது வேலைப் பகுதி முழுமையாக ஆணையாளரிடமிருந்து பெறப்பட்டு பொறியியலாளரிடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற வேளை பொறியியலாளரின் பணிப்புரைக்கு அமையவே உத்தியோகத்தர்கள் வேலை செய்ய வேண்டும். ஆணையாளரின் பணிப்புரைக்கமைய வேலை செய்ய முடியாது. ஆணையாளரிடமிருந்து அதிகாரங்களை பெற்ற பின்பு அவருக்கு இருக்கின்ற நேரடி அதிகாரம் 254 யுக்குக் கீழ் அறவிடவேண்டிய பிந்திய அறவீடுகளை அறவிடுவதும் வீதியோர வியாபாரத்தை தடை செய்வதுமாகும்.
மிகுதி அனைத்தும் மீளப்பெறப்பட்டு வேறு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதை மீறி அவரால் செய்யப்படுகின்ற அனைத்தும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை மீறுகின்ற செயற்பாடாகவே இருக்கும். இவ்வாறு அவரால் அத்துமீறி செய்யப்பட்ட 27 ற்கும் மேற்பட்ட சட்டமீறல்கள் எங்களால் ஆவணப்படுத்தப்பட்டு பிரதம செயலாளருக்கும் உள்ளுராட்சி ஆணையாளருக்கும் ஆளுநருக்கும் உரிய அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
கிழக்கு மாகாணமானாலும் வட மாகாணமானாலும் இலங்கைக்கு ஒரு சட்டம் தான். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை மீறி ஒருவர் செயற்படும் போது அவருக்கு எதிராக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கின்றவர்களால் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தார் பெப்ரவரி மாதத்திலேயே அவர் இங்கிருந்து அகற்றப்பட்டிருப்பார். நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. எங்களால் அமுல்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் பல அமுல்படுத்தப்படவில்லை. உத்தியோகத்தர்கள் பலர் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டிற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டிற்கான 17 வேலைகள் இன்னும் முடிக்கப்படவில்லை.
இவை தொடர்பில் நாங்கள் ஆளுநருக்கோ பிரதம செயலாளருக்கோ அறிவுறுத்தினாலும் எந்த நடவடிக்கையுமில்லை. ஆனால் உள்ளுராட்சி ஆணையாளர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார். இதன் காரணமாகத்தான் நாங்கள் மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக வழக்கு தொடுத்தோம். தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.
தடையையும் மீறி 87 குற்றங்கள் செய்யப்பட்டதன் பேரில் நாங்கள் நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம். அதில் அவர் பத்து இலட்சம் சரீரப் பிணையில் வெளிவந்திருக்கின்றார். அதன்படி அவர் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இன்னும் அது செய்யப்படவில்லை. நிர்வாகமே பிழையாக நடப்பதற்கு தூண்டும் செயலாகவே இதனை நான் கருதுகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருக்கின்ற இந்த மாநகர சபையை குழப்புவதும் அதன் மூலம் அபிவிருத்திகளை தடுப்பதுமே இதன் முழு நோக்கமாகும் என சுட்டிக்காட்டினார்.