
சுகாதார பணியாளர்களின் அடையாள வேலை நிறுத்தம் - மக்கள் பெரும் அசௌகரியம்
7,500 கொவிட் கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை உதவியாளர்கள் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மலையக வைத்தியசாலைகளுக்கு கிளினிக் மற்றும் சிகிச்சைக்காக சென்ற பலர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக சிகிச்சைக்காக சென்றவர்கள் மற்றும் கிளினிக்காக சென்றவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
எனினும் அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அவசர சேவைகள் வழமை போலவே இடம்பெற்றன. வைத்தியர்கள் மற்றும் மருந்து வழங்குனர்கள் ஒரு சில தாதியர்கள் சேவையில் ஈடுப்பட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தன.
குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (08) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஐந்து மணி நேரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.