
இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!
நாட்டில் இன்றைய தினம் 101 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இராஜாங்கனையில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கும் கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஈரானில் இருந்து வருகை தந்த 02 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 613 கொரோனா நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொவிட் 19 தொற்றுதியான மேலும் ஒருவர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு - குரண பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு முகாமில் உள்ள தனது தந்தையை பார்க்கச் சென்ற இருவரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த இருவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீர்கொழும்பில் பல்வேறு இடங்களில் 21 பேர் தமது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்கள் வெளிநாடுகளிலிருந்தும் தனிமைப்படுத்தல் முகாம்களிலிலிருந்தும் வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை மேலதிகமாக 14 நாட்கள் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளை சேர்ந்த சுகாதார பரிசோதகர்களினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நீர்கொழும்பில் தழுபொத்த, பிடிப்பன, கடற்கரைத் தெரு, திபிரிகஸ்கட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.