
விறகு வெட்ட சென்ற 25 வயது யுவதியை காணவில்லை
விறகு வெட்டுவதற்காக தாயுடன் வனப்பகுதிக்கு சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை தேடி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
தனது தாயுடன் நுவரெலியா டன்சினன் வனப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்கு சென்ற போதே குறித்த யுவதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை 9.30 மணி அளவில் டன்சினன் தோட்டத்திற்கு மேலே அமைந்துள்ள டன்சினன் வனப்பகுதிக்கு தனது மகளுடன் சென்றதாகவும், வனப்பகுதியின் உச்சிற்கு மகள் சென்ற நிலையில் மீண்டும் வரவில்லை என அவரது தாய் மனோமனி (58) தெரிவித்தார்.
பிற்பகல் 2 மணி வரையில் மகள் திரும்பாததால் சம்பவம் குறித்த அயலவர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் நேற்று மாலை தொடக்கம் வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் மேலும் தெரிவித்தார்.