
இஸ்ரேலில் வேலையில்லா பிரச்சனை 21 சத வீதத்தால் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ்வில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த செயல்பாடு காரணமாக தனிமனிதரின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொற்று காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈடு மிக மெதுவாகவே வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டதுடன், அவர்கள் சமூக இடைவெளியை முற்றாக பேணவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனையை தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் பெஞ்சமின் நெற்றன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்களுடனான சந்திப்பொன்றை அவர் மேற்கொண்டிருந்தார்.
கொரோனா தொற்று பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் கடுமையான பல்வேறு ஒழிப்பு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மே மாத இறுதியில் அவை படிப்படியாக தளர்த்தப்பட்டன.
வேலையில்லா பிரச்சனை 21 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் புதிய கொரோனா வைரஸ் 1500 பேருக்கு தொற்றியுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இஸ்ரேலில் இதுவரை 354 மக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அதிக அளவில் தொற்றின் தாக்கம் அமெரிக்காவில் தொடரும் நிலையிலும், புளோரிடாவில் உள்ள உலக புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி உல்லாச ஸ்தலம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
வருகை தருபவர்கள் பாதுகாப்பு முகமூடி அணிவதுடன், சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்கள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.
வால்ட் டிஸ்னி உல்லாச ஸ்தலம் அமைந்துள்ள புளோரிடா மானிலத்தில் மட்டும் 4 ஆயிரத்து 197 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.