கொரோனா வைரஸ் : முடக்கப்பட்ட விக்டோரியா மாநிலதத்தில் புதிதாக 273 பேருக்கு தொற்று

கொரோனா வைரஸ் : முடக்கப்பட்ட விக்டோரியா மாநிலதத்தில் புதிதாக 273 பேருக்கு தொற்று

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக புதிதாக 273 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது இந்த வாரத்தில் பதிவான மூன்று இலக்க அதிகரிப்பு என்றும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகப் பரவல் அதிகரித்த நிலையில் அவுஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் தலைநகரான மெல்போர்ன் கடந்த வியாழக்கிழமை முதல் ஆறு வாரங்களுக்கு முடக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள விக்டோரியாவின் முதல்வர் டேனியல் அண்ட்ரூஸ், இது ஒரு ஆபத்தான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் தேவை ஏற்படின் மட்டுமே வெளியில் செல்லுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக 288 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, அங்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையின் பிரதிபலிப்பே இவை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நாளொன்றுக்கு நடத்தப்படுவதாகவும் இதுவரை மட்டும் அங்கு மூவாயிரத்து 560 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பொது மற்றும் தனியார் வைத்தியசாலைகள், முதியோர் பராமரிப்பு இல்லங்கள், பொது வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு இன்று ஒருவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து நாடு முழுவதும் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளதாகவும் முதல்வர் டேனியல் அண்ட்ரூஸ் குறிப்பிட்டுள்ளார்.