ஊழியர்கள் டிக்டாக்கை செல்போனில் இருந்து நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது அமேசான்

ஊழியர்கள் டிக்டாக்கை செல்போனில் இருந்து நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது அமேசான்

டிக்டாக் செயலியை செல்போன்களில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும் என ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனம் இமெயில் ஒன்றை அனுப்பியிருந்தது. இந்த விவகாரம் பரபரப்பானதை தொடர்ந்து அந்த இமெயில் தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது.

லடாக் விவகாரத்தில் சீனாவுடன் மோதல் அதிகரித்து வந்த நிலையில் டிக்டாக் உள்ளிட்ட 50-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. 

இந்த தடை தொடர்பாக கடந்த 8 ஆம் தேதி கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பயனாளர்களின் தகவல்களை சீனா உளவு பார்க்கிறது. இந்த செயலிகளை அமெரிக்காவில் தடை செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நேற்று தனது நிறுவன ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியது. 

அதில் அலுவலக இமெயிலை பயன்படுத்தும் செல்போனில் இருந்து டிக்டாக் செயலியை ஊழியர்கள் உடனடியாக நீக்கம் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அமேசான் நிறுவனத்தின் பாதுகாப்பு நலனுக்காக ஊழியர்கள் தங்கள் செல்போனில் உள்ள டிக்டாக்கை உடனடியாக நீக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமேசான் நிறுவனத்தின் இந்த இமெயில் ஊழியர்கள் மத்தியிலும் டிக்டாக் நிறுவனத்தின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, டிக்டாக் நிறுவன அதிகாரிகள் அமேசானை தொடர்பு கொண்டு ஊழியர்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தக்கூடாது என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு குறித்து விளக்கம் கேட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் பரபரப்பான நிலையில் இமெயில் அனுப்பப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் டிக்டாக்கை ஊழியர்கள் உடனடியாக தங்கள் செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என தவறுதலாக இமெயில் அனுப்பப்பட்டு விட்டதாகவும், ஊழியர்கள் தங்கள் செல்போனில் டிக்டாக் செயலியை வைத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டிக்டாக் செயலியை ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அனுப்பப்பட்ட இமெயில் வெளியாகி சில மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டில் இருந்து அமேசான் நிறுவனம் பின்வாங்கியது.