கொவிட்-19 தோற்றம் குறித்து ஆராய சீனா சென்றது உலக சுகாதார அமைப்பின் விஷேட குழு!

கொவிட்-19 தோற்றம் குறித்து ஆராய சீனா சென்றது உலக சுகாதார அமைப்பின் விஷேட குழு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அறிவதற்காக, உலக சுகாதார அமைப்பின் விஷேட குழுவொன்று சீனாவுக்குச் சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் உருவானது குறித்து விசாரணை நடத்த, கடந்த மே மாதம் உலக சுகாதார அமைப்பிடம் உலக நாடுகள், கோரிக்கை முன்வைத்ததற்கு அமைய, உலக சுகாதார அமைப்பின் குழுவொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்ஜிங்கை சென்றடைந்தது.

இரண்டு நாட்களாக அங்கு தங்கியிருக்கும் நிபுணர்கள் குழு, கொரோனா வைரஸ் உருவானது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

சீனாவில் வுஹானில் தோன்றிப் பரவிய கொரோனா தொற்று பற்றிய விபரங்களைத் தருவதைத் தொடர்ந்து சீனா தாமதித்துவரும் நிலையில் இந்தக் குழு அங்கு சென்றுள்ளது.

‘நிமோனியா தொற்று’ பற்றி உலக சுகாதார அமைப்புக்கு, வுஹான் மாநகர சுகாதாரக் குழு அறிக்கையளித்து, ஏறத்தாழ 6 மாதங்களுக்குப் பிறகு சீனாவுக்குக் இந்தக் குழு சென்றுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இதுவரை ஒரு கோடியே 26 இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 5 இலட்சத்து 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

சீனா கொரோனா வைரஸ் தொற்றினை வேண்டுமென பரப்பியதாகவும், உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களினை தொடர்ந்தும் மறைப்பதாகவும், அமெரிக்கா நேரடியாகவே தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது. எனினும், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை சீனா நிராகரித்து வருகின்றது.

அதேபோன்று உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து அதற்கு வழங்கி வந்த நிதியினை இடைநிறுத்திய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதற்கான நடவடிக்கையினையும் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.