நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!

நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!

கல்வி சமுகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தை மேற்கொண்டனர்.

நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்னால் ஆரம்பித்த இந்தப் பேரணி, அங்கிருந்து வாகன பேரணியாக நுவரெலியா-பதுளை பிரதான வீதி ஊடாக நுவரெலியா நகரை நோக்கி பயணித்தது.

இதன்போது கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமும் எழுப்பியவாறு பேரணி இடம்பெற்றது.

இந்தப் பேரணியில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ ஆகிய கல்வி வலையங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு உட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்றுபட்டு கலந்து கொண்டனர்.

1994ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு நிலவி வரும் சம்பள உயர்வு முரண்பாடு, மற்றும் சம்பள நிலுவை போன்றவற்றுக்கான தீர்வினை வழங்குமாறும், கல்வியை தனியார் மயமாக்கும் கொத்தலாவலை பல்கலைக்கழக சட்டமூலத்தை கிழித்தெறிய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

நாட்டின் தேசிய வருமானத்தில் 6% வீதத்தை ஆசிரியர் சேவைக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.