சுமார் 6.5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வடக்கு கடல் பிரதேசத்தில் நேற்று (25) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சுமார் 6 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 216 கிலோகிராம் கேரள கஞ்சாவும், 19 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
22 - 34 வயதான குறித்த சந்தேகநபர்கள் காங்கேசன்துறை வளலாய் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
அத்துடன் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.