டயகம சிறுமியின் சரீரத்தை தோண்டியெடுத்து மீள பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவு!
டயகம சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தின் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி உடலை தோண்டியெடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை மீண்டும் தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரி்சோதனை மேற்கொள்ளுமாறு இதன்போது நீதிவான் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகியோரும் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், வேறொரு பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.