டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க இரண்டு காவல்துறை குழுக்கள்!
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து, இரண்டு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்றில் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் சபையில் இன்று கேள்வி எழுப்பினர்.
சிறுமியின் மரணம் தொடர்பாக மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை எந்த மட்டத்தில் உள்ளது? என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த குறித்த 16 வயது சிறுமி, எரியுண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எரிகாயங்களினால் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளாரென அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்றும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சபையில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, இரண்டு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறுமி மரணத்திற்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் த.யோகராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை, சபை அமர்வில் கலந்துகொண்ட 28 உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து, உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி, காவல்துறையில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளது.
மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.
இதேநேரம், குறித்த சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் தனியொருவரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி டயகம மூன்றாம் பிரிவு தோட்ட மக்கள் இன்று கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.