அர்ஜூன் மகேந்திரன் இன்றி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்ல எதிர்ப்பார்ப்பு - சட்டமா அதிபர்
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் அதன் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு மீள அழைத்துவர முடியாது போனால், அவர் இன்றி வழக்கு விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சட்டமாதிபர் அறிவித்துள்ளார்.
மேல்நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட நீதாயத்திற்கு சட்டமாதிபர் முதன்முறையாக இதனை அறியப்படுத்தியுள்ளார்.
சம்பா ஜானகி ராஜரட்ன, நாமல் பலல்லே ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் பிரியந்த நாவான இதனை அறிவித்ததாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, பிரதிவாதியின்றி வழக்கு விசாரணையினை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதா? என நீதிபதி சம்பா ஜானகி, மேலதிக மன்றாடியார் நாயகத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய மேலதிக மன்றாடியார் நாயகம், அர்ஜூன் மகேந்திரனை கைதி பறிமாற்ற விதிகளின் படி, நாட்டிற்கு மீள அழைத்துவருவது தொடர்பில் இருநாடுகளினதும் சட்டமாதிபர்களுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அந்த நடவடிக்கை தோல்வியுறும் பட்சத்தில், பிரதிவாதியின்றி வழக்கு விசாரணையினை ஆரம்பிப்பதற்கு நீதிமன்றிற்கு கோரிக்கை விடுக்கவுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் நீதாயத்திற்கு தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி திறைசேரி பிணைமுறி விநியோகத்தில் 688 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமாதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.