“தேவை இல்லை” அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ள கிம்மின் சகோதரி

“தேவை இல்லை” அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ள கிம்மின் சகோதரி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை வடகொரியாவுக்கு இல்லை என்று கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தை தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“அமெரிக்காவுடன் மீண்டும் அமர்த்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவை இல்லை.

ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது ஒரு தரப்பின் பெருமைக்காக மட்டுமே இருக்கும்.

தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் வட கொரியாவில், முதல் அதிபரான இரண்டாம் கிம் சங்கின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தென் கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் சென்றிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

“வட கொரியாவின் அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்கி, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில், நாங்கள் உறுதியாக உள்ளோம். என்னுடைய இந்த பயணத்தில், வட கொரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த, எந்த திட்டமும் இல்லை.” என்று கூறினார்.

இந்த நிலையிலேயே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை வடகொரியாவுக்கு இல்லை என்று கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங் பதிலடி கொடுத்துள்ளார்.