எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்ட இழப்பீடு கிடைத்தது
தீப்பற்றி அனர்த்தத்திற்கு உள்ளாகிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்ட இழப்பீடாக கிடைத்துள்ள நிதி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்று கடலோரப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் அதிகபட்ச இழப்பீட்டு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சில் கடந்த 14 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஆரம்ப இழப்பீடாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துமாறு அரசாங்கம் குறித்த நிறுவனத்திடம் கோரியிருந்தது. ஆனால் இதுவரை 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கிடைத்துள்ளன.
அத்துடன், இதில் கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இழப்பீடு வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடலோர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)