
ஐந்தாவது நாளாகவும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள்
இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 5ஆம் நாளாகவும் தொடர்கிறது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரிதிநிதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றன.
இதேவேளை, ஆசிரியர் சங்கங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைர்களை மிலேச்சதனமாகவும் அராஜகமுறையிலும், அரசாங்க தடுத்து வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மலையக ஆசிரியர் முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த முன்னணியின் செயலாளர் சின்னையா ரவிந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கல்வி பறிபோகும் வகையில் அரசாங்கம் சட்டங்களை இயற்றி எதிர்கால சந்ததியினரின் இருப்பை கேள்வி குறியாக்க முயற்சிக்கின்றது.
எனவே அதனை தடுக்கும் முயற்சியில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், ஈடுப்பட்டுள்ளன.
அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை இடும் வகையில், ஆசிரிய தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் போர்வையில், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலையக ஆசிரியர் முன்னணியின் செயலாளர் சின்னையா ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.