
சீனாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் துன்புறுத்தல்: காரணமானோருக்கு அமெரிக்கா தடையுத்தரவு!
சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஷின்ஜியாங் மாகாணத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவலகத்தின் இயக்குநரான வாங் மிங்சான், ஷின்ஜியாங் பிராந்தியத்தை சேர்ந்த மூத்த கட்சி உறுப்பினரான ஜூ ஹாய்லூன் மற்றும் பாதுகாப்புதுறையின் முன்னாள் அதிகாரியான ஹூவோ ஆகியோரும் இந்த புதிய தடையுத்தரவுகளுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களுடன் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்வது இனி அங்கு குற்றமாகும். மேலும் இவர்களுக்கு அமெரிக்காவை மையமாக கொண்ட முதலீடுகள், சொத்துக்கள் அனைத்தும் இனி முடக்கப்படும்.
ஷின்ஜியாங் மாகாணத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவலகத்தின் மீதும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீகர் முஸ்லிம்கள் மற்றும் பிற அமைப்பினருக்கு எதிராக பெரும் அளவிலான தடுப்புக்காவல்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கட்டாய கருத்தடை ஆகியவை நடத்தப்பட்டதாக சீனா மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இதனை சீனா தொடர்ந்து மறுத்துவருகின்றது.