ஒரு மாத சுற்றிவளைப்பில் 62 ஆயிரத்து 686 பேர் கைது! நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் மீட்பு

ஒரு மாத சுற்றிவளைப்பில் 62 ஆயிரத்து 686 பேர் கைது! நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் மீட்பு

கடந்த ஜூன் மாதம் 06ஆம் திகதி முதல், இம்மாதம் 08ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 62 ஆயிரத்து 686 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 12 ஆயிரத்து 186 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் 23 ஆயிரத்து 446 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 ஆயிரத்து 87 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 ஆயிரத்து 6 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 515 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 128 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12 ஆயிரத்து 307 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளில் ரி - 56 வகை துப்பாக்கிகள் 11, ரி - 81 வகை துப்பாக்கி 01, 12 துளை கொண்ட துப்பாக்கிகள் 42, கைத்துப்பாக்கிகள் 04, உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகள் 29, ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 74, வேறு துப்பாக்கிகள் 15, தோட்டாக்கள் 692, வாள்கள் 06, கத்திகள் 02 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின்போது வெடிபொருள், டெட்டனேட்டர்கள், கைக்குண்டுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, 4 இலட்சத்து 37 ஆயிரத்து 466 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.