உயர் பதவிகளுக்கான நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

உயர் பதவிகளுக்கான நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

வெளிநாட்டுத் தூதுவர்களாக அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ள இருவர், அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூவர் மற்றும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவருக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதியளித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முன்தினம் (23) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசானும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பர்னாந்து, அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா, இராஜாங்க அமைச்சர்களான வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, விதுர விக்ரமநாயக, பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த பிரேசிலுக்கான புதிய இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக, ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவர் விஸ்வநாத் அபோன்சோ ஆகியோருக்கு குழு அனுமதி வழங்கியிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.விதானபத்திரன, உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிப் பாவனை ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்ஹ, வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.சீ.எல்.கே.டி அல்விஸ் ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
இதற்கு மேலதிகமாக அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக அனுஷ பல்பிட்டவை நியமிப்பதற்கும் இக்குழு அனுமதி வழங்கியதாக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.