பட்டத்தால் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞர் கொலை: 3 பேர் கைது!

பட்டத்தால் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞர் கொலை: 3 பேர் கைது!

மினுவாங்கொடை, கொடகெதர பிரசேத்தில் நேற்று(20) பட்டம் ஒன்றை மையமாகக் கொண்டு ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22, 24 மற்றும் 49 வயதுடைய மூவர் என மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பட்டம் ஒன்றை மையமாகக் கொண்டு இரு தரப்பினரிடையே கடந்த 4 வருடங்களாக நிலவிவந்த பிரச்சினையின் விளைவாக, நேற்றிரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இவ்வாறு கொலையுண்ட இளைஞர் லக்மால் டி சில்வா என்ற 25 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது. இவர் நேற்று உந்துருளியொன்றில் சென்றுகொண்டிருந்தபோது, சந்தேகநபர்கள் அவரை மகிழுந்து ஒன்றினால் மோதச் செய்துள்ளனர்.

இதனையடுத்து, உந்துருளியிலிருந்து கீழே விழுந்த லக்மால், அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில் அவரை பின்தொடர்ந்து சென்ற சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மினுவாங்கொடை – கமன்கெதர பிரதேசததில் 2017 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பட்டமொன்றினால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, தந்தையொருவரும், அவரது மகனும் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 65 வயதான நபரொருவர் மினுவாங்கொடை – யட்டியன பிரதேசத்தில் 2018 ஏப்ரல் 5 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் நபரே நேற்று கொலை செய்யப்பட்ட இளைஞர் என தெரியவந்துள்ளது.