
லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரை அண்மித்த பகுதியில் இன்று (20) மதியம் 2 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த போது அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் எல்லை நிர்ணய கல்லில் மோதியுள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். இதன்போது வீதிக்கு அருகாமையில் இருந்த ´காட் கல்´ எனப்படுகின்ற எல்லை நிர்ணய கல்லில் தலை பட்டுள்ளது. அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்படும் போது தலைக்கவசமும் கழன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.