குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க அரசாங்கம் தீர்மானம்!
நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தார்.
குறித்த குறை நிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்து அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல் மற்றும் அதற்கு தேவையான ஏனைய விடயங்களை கொள்வனவு செய்வதற்காக இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
இதுதவிர கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூகம் மற்றும் பொருளாதார துறைகளில் கவனம் செலுத்தி இந்த தொகையை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் சிரேஸ்ட பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
நடமாட்டத்தடை அமுலில் உள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் குறித்த நிவாரணத்தை முன்னெடுத்து செல்வதற்காக இந்த குறை நிரப்பு பிரேரணையை விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அந்த வாரத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரினால் நாளை மறுதினம் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.