இலங்கை பிரஜைகள் கொரியாவில் தொழில்புரிவதற்கான ஏற்பாடுகள் விரைவில் - இலங்கைக்கான கொரியத் தூதுவர்
கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடைய இலங்கை பிரஜைகள் கொரியாவிற்கு பயணிப்பதற்கான வசதிகள் விரைவில் வழங்கப்படும் என கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் (Woonjin Jeong) உறுதியளித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் அவரது அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடையவர்கள் நீண்ட காலமாக தொழில் நிமித்தம் செல்வதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற போதிலும், கொவிட் பரவல் காரணமாக அது நாளுக்கு நாள் தவிர்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய இலங்கைக்கான கொரியத் தூதுவர், கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடைய அனைவருக்கும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கொவிட் பரவல் காரணமாக அந்த வாய்ப்புக்களை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளபோதிலும், அவர்கள் விரைவில் கொரியாவுக்கு பயணிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என கொரியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.