கொவிஷீல்டுக்கு பதிலாக பைஸர்: சாத்தியம் குறித்து ஆராயுமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!
முதல் செலுத்துகையாக அஸ்ட்ராசெனெகா (கொவிஷீல்ட்) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது செலுத்துகையாக பைஸர் தடுப்பூசியை வழங்கக்கூடிய சாத்தியம் தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார்.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் செலுத்துகையை பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது செலுத்துகையின்போது பைஸர் தடுப்பூசியை செலுத்துவது பாதுகாப்பானது என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர் குழு தெரிவித்திருந்தது.
அதனடிப்படையிலேயே, இராஜாங்க அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாட்டில் இதுவரையில் 925, 242 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் செலுத்துகை செலுத்தப்பட்டுள்ளதுடன்,
அவர்களில் 355, 412 பேருக்கு நேற்றுவரை கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவினால் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டதையடுத்து இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கொவிஷீல்டுக்கான பற்றாகுறை நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.