எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கெப்டனுக்கு பிணை: வெளிநாடு செல்லத் தடை!

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கெப்டனுக்கு பிணை: வெளிநாடு செல்லத் தடை!

கொழும்பு துறைமுக எல்லைக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீக்கிரையான எம்.வீ. எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனை, 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரஷ்ய நாட்டவரான  எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றினால் பயணத் தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் கடல்சார் சூழல் அதிகாரசபையினால் கடந்த மே 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இது குறித்த விசாரணைப் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்குழுவினரால் கடந்த 31 ஆம் திகதி கப்பல் கெப்டன், பிரதம பொறியியலாளர் மற்றும் பிரதி பொறியியலாளர் ஆகியோரிடம் சுமார் 14 மணித்தியால வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகல் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர், அவர் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.