உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? - அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல்

உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? - அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல்

2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக சொல்லப்பட்டது.உலகமெங்கும் சுமார் 17 கோடியே 53 லட்சம் பேரை பாதித்து, 38 லட்சம் பேரின் இன்னுயிர்களைப் பறித்து, இன்றும் மனித குலத்தை கதிகலங்க வைத்து வருவது கொரோனா வைரஸ்.

 


2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் இந்த வைரஸ் முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது. பின்னர் உகான் நகர ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உலகை அதிர வைத்தது.

இது தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டினார். அதை சீனா மறுத்து வந்தது. இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்தது.

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற ஊகம் மேலும் வலுத்துள்ள நிலையில், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இதுபற்றி 3 மாதங்களில் கண்டறியுமாறு அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு சமீபத்தில் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சீனாவின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யாங் ஜீச்சியும், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கனும் நேற்று முன்தினம் தொலைபேசி வழியாக பேசினார்கள்.

அப்போது கொரோனா வைரஸ் பிறப்பிடம் உகான் ஆய்வுக்கூடம்தான் என்று அமெரிக்கா கூறி வரும் விவகாரம் தொடர்பாக இருவர் இடையே மோதல் வெடித்தது.

இதுபற்றி, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கனிடம் சீனாவின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யாங் ஜீச்சி கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்று உகான் ஆய்வுக்கூடத்தில் தோன்றியது என்று கூறி அபத்தமான கதைகளை அமெரிக்காவில் உள்ள சிலர் இட்டுக்கட்டி கூறி உள்ளனர். இதில் சீனா மிகவும் கவலை கொண்டுள்ளது. சீனாவை அவதூறு செய்வதற்கும், சீனா மீது பழிபோடுவதற்கும் ஒரு சாக்காக பெருந்தொற்று நோயைப் பயன்படுத்தும் எந்தவொரு இழிவான செயலையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்று குறிப்பிட்டார்.

 

கொரோனா வைரஸ்

 

 

மேலும், “உண்மைகளையும், அறிவியலையும் மதிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பிறப்பிடம் எது என்று கண்டுபிடிப்பதை அரசியல் ஆக்குவதைத் தவிர்க்கவும், சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தவும் அமெரிக்காவை சீனா வலியுறுத்துகிறது” என்றும் கூறினார்.

அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், “கொரோனா வைரசின் தோற்றம் எங்கே என்பதில் ஒத்துழைப்பதும், வெளிப்படையாக நடந்து கொள்வதும் முக்கியம். இதில் உலக சுகாதார நிறுவன நிபுணர்களின் இரண்டாம் கட்ட ஆய்வு உள்ளிட்டவையும் அடங்கும்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது, எவ்வாறு பரவியது என்பதில் முழுமையான விசாரணையை அனுமதிக்கும் மூல தரவுகளையும், தொடர்புடைய இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் சீனா வழங்க தவறி விட்டதாக அமெரிக்காவும், மற்ற நாடுகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.