தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தப்பிக்க முயன்ற இங்கிலாந்து பிரஜை கைது
தூத்துக்குடியில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிக்க முயன்ற, இங்கிலாந்து பிரஜையொருவரை இந்திய உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள வெள்ளப்பட்டி கடலோரப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (47) என்பவரே இவ்வாறு நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் இதற்கு முன்பு அவர் கோவாவில் உள்ள ஷலிகோ என்ற பகுதியில் இருந்துள்ளார். ஓவர்சீஸ் சிட்டிசன் ஒப் இந்தியா (ஓசிஐ) என்ற இந்தியக் குடியுரிமைச் சான்றைப் பெற்று, கோவாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
பின்னர் தூத்துக்குடி வந்த அவர், இங்கிருந்து இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு படகு கிடைக்குமா? என்று மீனவர்களிடம் விசாரித்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை, பரோடா, கோவா ஆகிய பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் 226 கிலோ கேட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர். இதில்,குறித்த சந்தேக நபர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மும்பை சிறையில் இருந்துள்ளார். பின்னர் பிணையில் வெளிவந்த நிலையில், அவர் தூத்துக்குடி வந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.