பயன்படுத்தப்படாத 4 பேருந்துகள் கடலில் இறக்கிவிடப்பட்டன
கடற்படையின் உதவியுடன் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் ,செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் நேற்று (11) யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள கடற்பகுதியில் பயன்படுத்தப்படாத பேரூந்துகள் கடலில் இறக்கி விடப்பட்டுள்ளன.
சுமார் 30 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் நேற்றைய தினம் 4 பேருந்துகள் கடலில் இறக்கிவிடப்பட்டுள்ளன.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, பயன்படுத்த முடியாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம், மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, முதலாவது தொகுதி பேரூந்துகளை காங்கேசன்துறை, துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் சென்ற கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியில் கடலின் அடியில் இறக்கியுள்ளது.
இதேபோன்று எஞ்சிய பேரூந்துகளும் எதிர்வரும் நாட்களில் கடலில் இறக்கி விடப்படும் என்று கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுளில் மேற்கொள்ளப்படுவது போன்று, செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டின் கடல் வளத்தினை கணிசமானளவு அதிகரிக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறித்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.