2018 ஆம் ஆண்டு கொரிய தொழில்வாய்ப்புக்கு தெரிவான 3,500 பேர் நிர்க்கதி!
2018 ஆம் ஆண்டு கொரியாவுக்கான தொழில்வாய்ப்புக்கு தெரிவான, 3,500 இற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள், தொழில்வாய்ப்புக்காக அந்த நாட்டுக்கு செல்ல முடியாமல், இலங்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரிய தொழில்வாய்ப்பு பரீட்சைக்காக தோற்றி, கொரிய தொழில்வாய்ப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள போதிலும், தாங்கள் தொழில்வாய்ப்புக்காக செல்வதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால், இதுவரையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தங்களின் விசா காலம் முடிவடைந்தால், தாங்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்க நேரும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், தொழில்வாய்ப்பு தொடர்பில், கொரிய அரசாங்கம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இதுவரையில் உரிய அறிவித்தலையோ அல்லது அனுமதியையோ வழங்கவில்லை என பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரத்தெனிய தெரிவித்துள்ளார்.