எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்த விவகாரம் : இதுவரை 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு

எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்த விவகாரம் : இதுவரை 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு

மூழ்கி கொண்டிருக்கும் எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் இதுவரை 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலின் தலைவர், பொறியியலாளர்கள், இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் அடங்கலாக 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மூழ்கிக்கொண்டிருக்கும் எம்.வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலின் காணொளி பதிவகம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வர்த்தக கப்பல் செயலகமும், கடற்படையும் இணைந்து, குறித்த தகவல் பதிவாக்கத்தை கப்பலில் இருந்து மீட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று கையளித்தன.

இந்நிலையில், அது குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதேநேரம், குறித்த கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, நாளை முதல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.