இணையவழி தாக்குதல் இல்லை: தகவல் தொழில்நுட்ப சங்க தலைவருக்கு எதிராக சட்டநடவடிக்கை!
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு உரித்தான மேலும் பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது எவ்வித இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.
எனினும், ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் 6 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்தொழில்நுட்ப சங்கம் முன்னதாக அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த இணையளத்தளங்கள் மீது எந்தவொரு இணையவழி தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறே ஏற்பட்டிருந்தது என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.
இதேவேளை போலியான தகவலை பகிர்ந்த இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்ட மெத்தீவை, இலங்கை காவல்துறையின் கணினிக் குற்றப்பிரிவுக்கு அழைப்பித்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.