4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 131 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பகுதியில் படகொன்றிலிருந்து 101 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதன் பெறுமதி 30 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் மேலதிக விசாரணைகளுக்காக இளவாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது 29 கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 8 மில்லியன் ரூபா என கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.