ஈரானிய கடற்படைக்கு உரித்தான போர்க்கப்பல் தீக்கிரையாகி கடலில் மூழ்கியது

ஈரானிய கடற்படைக்கு உரித்தான போர்க்கப்பல் தீக்கிரையாகி கடலில் மூழ்கியது

ஈரான் கடற்படைக்கு சொந்தமான பாரிய போர்க்கப்பலான கார்க் (kharg) என்ற கப்பல் திடீரென தீப்பற்றியதையடுத்து, கடலில் மூழ்கியுள்ளது.

இந்தக் கப்பலானது ஓமான் வளைகுடா பகுதியில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்க் என்ற இக்கப்பலானது ஈரானின் தென் பகுதியிலுள்ள ஜாஸ்க் (Jask) துறைமுகத்துக்கு அருகில் நேற்று பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிடுருந்தபோது தீப்பற்றியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் அது பயனளித்திருக்கவில்லை.

சுமார் 20 மணித்தியால தீயணைப்பு நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னர், ஓமான் வளைகுடா பகுதியிலுள்ள ஹோமுஸ் நீரிணைக்கு அருகில் இன்றைய தினம் நீரில் மூழ்கியுள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத அதேவேளை, கப்பல் தீப்பற்றிய வேளையில், குறித்த கப்பலில் பணிக்குழுவினர் மற்றும் பயிற்சியாளர்கள் என 400க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவம் 20 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை எனவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

ஈரானிய கடற்படைக்கு சொந்தமான மிகப் பெரிய கப்பல் இதுவென தெரிவிக்கப்படுகிறது. 
இதன் நீளம் 207 மீற்றர் மீற்றர்களாகும். இதனுள், 7 அதிவேக ஏவுகணை இயந்திரங்கள் காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் 1977 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இக்கப்பலானது, 1984 ஆம் ஆண்டு ஈரானிய கடற்படையில் இணைந்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.