காலி துறைமுகக் கடலில் விழுந்து காணாமல்போன துப்பாக்கி, பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பில் விசாரணை
இந்தோனேஷியாவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பொருட்களை ஏற்றி சென்ற கப்பல் கேப்டனுக்கு கப்பல் பாதுகாப்பு நிறுவனத்தினால் துப்பாக்கிகளை வழங்கும்போது அதில் ஒரு தொகுதி காலி துறைமுகக் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கப்பலுக்கு துப்பாக்கிகளைக் கொண்டு சென்ற படகினை செலுத்தியவரால் காலி துறைமுக காவல்துறையிடம் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலி துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில், சர்வதேச கடல் எல்லையில் துப்பாக்கிகள் மற்றும் மேலும் சில உபகரணங்கள் பழு தூக்கி ஊடாக கப்பலுக்கு ஏற்ற சென்ற வேளையில் சீரற்ற வானிலையால் கடலில் விழுந்துள்ளதாக முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது 14 துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் 2,400 ரவைகள் உள்ளிட்ட மேலும் சில உபகரணங்கள் கடலில் விழுந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையால் நீதிமன்றில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.