தீக்கிரையான கப்பல் கடலில் மூழ்கினால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை! (காணொளி)
தீக்கிரையான எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கினால், ஏற்பட்டக்கூடிய சூழல் பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்காக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி, தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பலால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க, கொழும்பு துறைமுக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் இருந்து கடலில் கழிவுகள் கலந்தமையினால் நீர்கொழும்பு களப்பை பாதுகாப்பதற்காக, குறித்த கடல்எல்லைகளில் நேற்று மணல் மூடைகள் இடப்பட்டன.
தற்போது, குறித்த கப்பலின் பொறியியலாளர்கள் அறை, பிரதான கட்டுப்பாட்டு அறை மற்றும் கொள்கலன்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை, தீப்பற்றிய கப்பலிலிருந்து கடலில் விழுந்த சிதைவுகள், பொருட்கள் நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளன.
இந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தின் 14 ஆவது படையணியினால் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, சுமார் 450க்கு அதிகமான படையினர் மற்றும் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்படையணியில் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா தெரிவித்தார்.